தமிழக அரசியல் இனி?

‘ஆதிக்கக் கலாச்சாரத்தில், அரசியல் நிலைப்பாட்டில், அணுகுமுறையில் எள்ளளவும் எந்த மாற்றமும் செய்ய மாட்டோம்; நீங்களெல்லாம் வந்து எங்களை ஆதரியுங்கள்’ என்கிற காங்கிரசுத் திமிருக்குக் கிடைத்த அடிதான் இந்தியா முழுவதும் பெற்றிருக்கும் இப்போதைய தோல்வியும். ஹரியானாவில்கூட வெற்றிக்கோட்டைத் தாண்டமுடியாததற்கு காரணம் இதுதான்.

சோனியா காந்தி, ராகுல் முதல் கடைசி காங்கிரசுத் தொண்டன் வரை, எந்தவொரு சுயபரிசோதனைக்கும் இவர்கள் அணியமாக இல்லை. தங்களுடைய அமெரிக்க அடிமைத்தனமும், உலக வங்கியிடம் மண்டியிடலும், கார்ப்பரேட்டுகளுக்குக் கீழ்படிதலும் சரியென்றே இவர்கள் இன்னமும் சாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

தாங்கள் கொண்டுவந்த அதே ஆதார், ஜி.எஸ்.டி. போன்றத் திட்டங்களைத்தான் பாஜகவும் அமுல்படுத்துகிறது என்பதை ஒத்துக்கொள்ளும் உண்மையும், நேர்மையும், நாகரிகமும்கூட இல்லாத பித்துக்குளிகள்தான் காங்கிரசார்.

தங்களையே கேள்வி கேட்டுக்கொள்ளும், தங்கள் கொள்கைகளை மறுபரிசீலனை செய்துகொள்ளும் துணிச்சலும், நேர்மையுமற்ற இவர்கள் எக்காலத்திலும் தேறமாட்டார்கள். பணம் உள்ளவர் என்பதற்காக மட்டுமே இறக்குமதி செய்யப்பட்ட காங்கிரசு வேட்பாளர் நாங்குநேரியில் தோற்றதில் ஆச்சரியமேதுமில்லை.

விக்கிரவாண்டியில் திமுகவின் தோல்வியும் வியப்பளிக்கவில்லை. காங்கிரசுக் கட்சி போலவே, தங்கள் கட்சியின் உட்கட்சி கலாச்சாரத்தில், அரசியல் நிலைப்பாட்டில், அணுகுமுறையில் இவர்களும் எந்த மாற்றத்தையும் செய்ய அணியமாக இல்லை. திரு. ஸ்டாலின் வேண்டுமா, வேண்டாமா என்பதைப் பற்றியே தமிழ் மக்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில், அவரது செல்லப்பிள்ளை, சினிமா நடிகர், பட்டத்து இளவரசன் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடத்தி முடித்ததை தமிழர்கள் ஏற்கவில்லை.

சட்டிக்குள் சரக்கு ஏதுமில்லாமல், வழக்கம்போல வெற்றுப்பேச்சுக் கரண்டியை வெறுமனே ஆட்டியே, பாஜக-பாசிசம் என்று பயங்காட்டியே, மந்திரத்தால் மாங்காய் விழவைக்கலாம் என்று கனவு காண்கிறார்கள் இவர்கள்.

இவர்களோடு கூட்டணி வைத்திருக்கும் பெரும்பாலான கட்சிகள் மீதும் தமிழ் மக்கள் நம்பிக்கையோ, மரியாதையோ கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை. தேர்தலுக்குத் தேர்தல் மாறிக்கொண்டிருக்கும் இவர்களின் கொள்கைகள், நிலைப்பாடுகள், பேச்சுக்களை தமிழர்கள் விரும்பவில்லை. இவர்களின் சுயநலவாதம், சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

இந்த திமுக-காங்கிரசு-பிறக் கட்சிகளின் பலவீனங்களால் வலதுசாரி கட்சிகளை உள்ளடக்கிய அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. பணவாதிகள், மதவாதிகள், சாதியவாதிகள், குழப்பவாதிகள் அனைவரும் சேர்ந்து வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட சிறு-வலதுசாரிகளின் பிடித்திழுத்தலுக்கும், பெரு-வலதுசாரிகளின் கிடுக்கிப்பிடிக்கும் இடையே சிக்கிக்கொண்டிருக்கிறது தமிழகம்.

தங்களை மாற்றாக முன்னிறுத்தும் சிறியக் கட்சிகளில் பலவும் இதே வலதுசாரி அரசியல் கலாச்சாரத்துக்குள்தான் மூழ்கிக்கிடக்கின்றன. ரஜினி-கமல்-விஜயகாந்த் என்கிற ஒரு கூட்டணியை ‘உலக நாயகன்’ முன்னெடுக்க விரும்புகிறாராம். இவர்களுக்கும் முற்போக்கு அரசியலுக்கும் எந்தவிதமானத் தொடர்பும் கிடையாது.

தமிழர் விடுதலை, சிறுபான்மையினர் உரிமைகள், தலித் மக்கள் மாண்பு போற்றும் கட்சிகளுக்குள்ளும் ஏராளமான முரண்கள் நிலவுகின்றன. எடுத்துக்காட்டாக, ‘நாம் தமிழர்’ கட்சியினர் தனித்தே இயங்குவதில் உறுதியாக இருக்கின்றனர். சனநாயகத்தன்மை, கருத்துப் பரிமாற்றம், கூட்டுத்தலைமை போன்றவற்றில் அறவே நம்பிக்கை இல்லாத அவர்களோடு பிறர் கைகோர்த்து இயங்குவதும் இயலாத விடயம்.

பெரிய, நடுத்தரக் கட்சிகளில் இணைந்தால், பிற்காலத்தில் கருத்து வேறுபாடுகள், கொள்கை முரண்கள், மனக்கிலேசங்கள் எழலாம் என்றஞ்சி (என்னையும், என் தோழர்களையும் போல) தனியாக ‘பெட்டிக்கடை’ கட்சிகள், இயக்கங்கள் நடத்துபவர்கள் தமிழகத்தில் ஏராளம். இரண்டு பேர் முதல் இரண்டாயிரம் பேர் வரையுள்ள இம்மாதிரி கட்சிகள், இயக்கங்களின் பட்டியல் உண்மையிலேயே மிக நீளமான ஒன்று. பத்தாயிரம் குழுக்கள்கூட இருக்கலாம். இவர்கள் தனியாக நின்று எதையும் சாதிக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை.

எடுத்துக்காட்டாக, விக்கிரவாண்டியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தமிழ்ப் பேரரசுக் கட்சி தோழர் வ. கெளதமன் வெறும் 328 வாக்குகள் மட்டுமே வாங்கியிருக்கிறார். நாங்குநேரியில் நாம் தமிழர் கட்சியைவிட ஒரு சாதிக்கட்சி வேட்பாளர் அதிக வாக்குகள் வாங்கியிருக்கிறார்.

அரசியல் யதார்த்தம் இப்படியெல்லாம் இருந்தாலும், மேற்குறிப்பிட்ட பத்தாயிரம் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் எந்த விதத்திலும் இணைய முடியாத நிலைதான் நிலவுகிறது. இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஒரு தலைவர் வருவார், ஒரு புத்தகம் தருவார், நாமெல்லாம் சுபிட்சம் நோக்கி சுகமாக நடப்போம் என்று கனவு கண்டுகொண்டிருப்பதிலும் அர்த்தம் இல்லை.

தமிழக அரசியல் கட்சிகள் போலவே, பெரும்பாலான தமிழ் மக்களும் லஞ்ச ஊழல் வயப்பட்டுவிட்டனர், அல்லது வயப்படுத்திவிட்டனர். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பல கோடி ரூபாய்களை இரு தரப்பும் வாரி இறைத்திருக்கின்றனர். பணம் கொடுக்காமல் இனி தேர்தலில் போட்டியிடவே முடியாது எனும் நிலை நாடு முழுவதும் உருவாக்கப்பட்டு விட்டது.

மகாத்மா காந்தியே திரும்பப் பிறந்துவந்து தேர்தலில் நின்றாலும், பல கோடி ரூபாய் கையில் இல்லையென்றால், வைப்புத்தொகையை இழந்துவிடுவார் என்பதுதான் தற்போதைய நிலை. உங்கள் உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும், உறுதியும், அற்புதத் திட்டங்களும் இங்கே யாருடைய கவனத்தையும், அங்கீகாரத்தையும் பெறாது.

இந்த நிலையில் என்னதான் செய்வது? அதிகாரம், பதவி, பணம், புகழ் என்கிற மையநீரோட்ட அரசியலை ஒதுக்கித்தள்ளிவிட்டு, உயரிய சிந்தனை, மக்கள் தொண்டு, சமூக சீர்திருத்தம் போற்றும் போராட்ட அரசியலைக் கையிலெடுப்பது ஒன்றே உசிதமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மேற்குறிப்பிட்ட பத்தாயிரத்தில் சில நூறு கட்சிகளும், இயக்கங்களும் கைகோர்த்து, ஓர் அடிப்படை வேலைத்திட்டத்தோடு, கூட்டுத்தலைமை, கூடிமுடிவெடுக்கும் தன்மைகளோடு களத்தில் இறங்கி கர்மசிரத்தையாக வேலை செய்தால், நாளடைவில் மாற்றங்கள் வரும். தமிழ் மக்கள் நலன் ஒன்றை மட்டுமே மனதில் நிறுத்தி வேலைசெய்தால், இந்த அமைப்புக்கு யார் தலைவர், மேடைகளில் யார் கடைசியாகப் பேசுவது, பதாகைகளில் யார் பெயரை பெரிதாக அச்சடிப்பது என்பன போன்ற பிரச்சினைகள் எழாது.

இன்றே, இப்போதே, இங்கேயே இந்த வேலையில் இறங்குவோம். இதற்கு அணியமாயிருக்கும் கட்சி/இயக்கம்/தனி நபர் கீழே பின்னூட்டத்தில் தங்கள் பெயர் மற்றும் தொடர்பு விபரங்களைத் தெரியப்படுத்துங்கள். நன்றி!

சுப. உதயகுமாரன்,
நாகர்கோவில்,
அக்டோபர் 25, 2019.

காந்தள் களம்

Next Post

சஷ்டி விழா

Sat Oct 26 , 2019
Kaanthalkalam

You May Like

Author

Saajaa Guna