‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்.

சென்னை, ஜூன் 23-

‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பது ஏன் என்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அழைத்து வருகின்றனர். இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும் ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கூட்டத்தில் விளக்கம் அளித்து பேசியதாவது:
‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.  அது உள்ளபடியே முழுக்க முழுக்க தவறு. சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.  
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி, “இந்தியா, அதாவது பாரதம் – மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்”( India, that is Bharat, shall be a Union of States”) என்று தான் உள்ளது.
அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை. 
‘ஒன்றியம்’ என்பது தவறான சொல் அல்ல. ‘மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது’ என்பதுதான் அதனுடைய பொருள். 
இன்னும் சிலர் பேரறிஞர் அண்ணா சொல்லாததை, எங்கள் தலைவர் கருணாநிதி சொல்லாததை நாங்கள் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டு, அதை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். 
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய 1957-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே ‘இந்திய யூனியன்’ என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. 1963-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதியன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேரறிஞர் அண்ணா பேசுகிறபோது, “அரசினுடைய இறைமை என்பதற்கு நாம் மேற்கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இறைமையானது, பொது மக்களிடம் நிலைத்துள்ளது என அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறைமையானது, கூட்டாட்சி ஒன்றியத்துக்கும், அதன் அங்கங்களுக்கும் இடையே, அதாவது மாநிலங்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளது” என்றுதான் பேசியிருக்கிறார். 
‘சமஷ்டி’ என்ற வார்த்தையை ம.பொ.சி பயன்படுத்தியிருக்கிறார். ‘வெளியேறுக மிகுதியான அதிகாரக் குவிப்பு – வருக உண்மையான கூட்டாட்சி’ என்று மூதறிஞர் ராஜாஜி எழுதியிருக்கிறார்கள்.  எனவே, ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை.
அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது.  அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம், பயன்படுத்துவோம், பயன்படுத்திக் கொண்டேயிருப்போம். 
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

காந்தள் களம்

Next Post

தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த ஐவர் குழு - மு.க.ஸ்டாலினின் அதிரடி மூவ்

Wed Jun 30 , 2021
தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்க ஐவர் குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.கொரோனா வைரஸின் முதல் அலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. அப்போது, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, சிறு, குறு தொழில்கள் முதல் பெரிய நிறுவனங்களின் வணிகங்கள் வரை அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன. முதல் அலையின் தாக்கம் குறைந்தவுடன் […]

Author

Saajaa Guna