தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்க ஐவர் குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
கொரோனா வைரஸின் முதல் அலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. அப்போது, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, சிறு, குறு தொழில்கள் முதல் பெரிய நிறுவனங்களின் வணிகங்கள் வரை அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன. முதல் அலையின் தாக்கம் குறைந்தவுடன் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது. இருப்பினும், கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்ததால் அந்தந்த மாநிலங்களில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், முதல் அலையில் தப்பிய சில வணிக நிறுவனங்கள் கூட இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக கடுமையான பாதிப்புகளை சந்தித்தன. மேலும், வேலைவாய்ப்பு இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டின் பொருளாதாரம் பின்னடைவு சந்தித்து வருகிறது.
இதற்கு தமிழகத்தின் பொருளாதாரமும் விதிவிளக்கல்ல என்ற சூழல் இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி, தமிழகத்தின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் தான் ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல்வருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் குழு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.
இக்குழுவில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் மற்றும் பேராசிரியர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்றவரும் அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியருமான எஸ்தர் டஃப்லோ, மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், முன்னாள் மத்திய நிதி செயலாளர் எஸ்.நாராயணன் ஆகிய 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இக்குழு பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மாநில உற்பத்தி வளர்ச்சியை ஊக்குவிப்பது, மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதிநிலையை உயர்த்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகளை அளிக்க உள்ளது.
சர்வதேச அளவில் பிரபலமான பொருளாதார நிபுணர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு நேரடியாக அந்நிய முதலீட்டை ஈர்ப்பது, தொழில் நிறுவனங்கள் புதிதாக தொடங்குவதற்கான வாய்ப்புகளை எளிமைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழில் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு நாடு பொருளாதார ரீதியாக பெரும் சிக்கல்களை சந்தித்து வரக்கூடிய சூழலில் மத்திய அரசு செய்ய தவறியதை தமிழக அரசு செய்துள்ளதாக பல்வேறு அரசியல் நோக்கர்கள், பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். மொத்தத்தில், மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி மூவ் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஐவர் குழுவினரால் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பெருகி வேலைவாய்ப்புகள் உருவாகி பொருளாதாரம் உயர வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இவ்வாறு, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த ஐவர் குழு சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த ஐவர் குழு – மு.க.ஸ்டாலினின் அதிரடி மூவ்
