இல.கணேசன்- ஆர்.எஸ்.எஸ் டூ ஆளுநர்

இல.கணேசன்- ஆர்.எஸ்.எஸ் டூ ஆளுநர் 50 ஆண்டு உழைப்புக்கு கிடைத்த பரிசு

மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 10-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, சிக்கிம் மாநில ஆளுநர் கங்கா பிரசாத் சவுராசியா மணிப்பூர் மாநில ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்தநிலையில், மணிப்பூர் மாநில புதிய ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை நியமித்து குடியரசு தலைர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதன் மூலம், இல.கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் 17-வது ஆளுநராக ஆகியுள்ளார்.

சிறு வயதில் தந்தையை இழந்தார்:

இல.கணேசன் தஞ்சாவூரில் கடந்த 1945-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி பிறந்தார். அவருடைய தந்தை லட்சுமி ராகவ அய்யர், தாய் அலமேலு அம்மாள். இல.கணேசனுக்கு 9 வயது இருக்கும் போது அவருடைய தந்தை லட்சுமி ராகவ அய்யர் காலமானார்.
பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே இல.கணேசன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து வந்துள்ளார். எஸ்.எஸ்.எல்.சி படித்து முடித்த பிறகு வருவாய் துறையில் வருவாய் தீர்வக ஆய்வாளர் பணியில் சேர்ந்தார்.

ஆர்.எஸ்.எஸ் முழு நேர ஊழியர்:

வருவாய் துறை பணியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் முழு நேர ஊழியராக பணியாற்றி வந்தார். ஆர்.எஸ்.எஸ்யில் நாகர்கோவில் நகர அமைப்பாளர், கன்னியாகுமரி மாவட்ட அமைப்பாளர், மதுரை கோட்ட அமைப்பாளர் பொறுப்புகளை வகித்துள்ளார். 1975-ம் ஆண்டு அவசர நிலை பிரகடனத்தின் போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தமிழ்நாடு தலைமை ஒருங்கிணைப்பாளராக இல.கணேசன் இருந்துள்ளார்.

திருமணம் செய்யவில்லை:

ஆர்.எஸ்.எஸ் தலைமையால் பாஜகவுக்கு அனுப்பப்பட்டார். பாஜகவில் மாநில அமைப்பு பொது செயலாளர், தேசிய செயலாளர், தேசிய துணை தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார். 2009 மற்றும் 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தல்களில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2016-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் மாநிலம் போபால் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 18 மாதங்கள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் முழு நேர ஊழியர் என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை.

கருணாநிதியின் நண்பர்:

2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை பாஜகவின் மாநில தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். 1998-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை மத்தியில் வாஜ்பாய் ஆட்சி நடைபெற்ற போது செல்வமிக்கவராக இருந்தார். பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருந்த காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பராகவும் விளங்கி வந்தார்.

நான்காவது ஆளுநர்:

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, தமிழகத்தை சேர்ந்த வி.சண்முகநாதன் மேகலாயாவுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளின் காரணமாக அப்பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டு 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த பிறகு மாற்றப்பட்டார். இதையடுத்து, தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கான ஆளுநராக நியமிக்கப்பட்டு தற்போது, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக(பொறுப்பு) இருக்கிறார். இந்த சூழலில், இல.கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராகியுள்ளார். இதன் மூலம், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தை சேர்ந்த நான்காவது ஆளுநராக இல.கணேசன் ஆகியுள்ளார்.

இல.கணேசனுக்கு கிடைத்த பரிசு:

50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல், சமூக பணிகளில் ஈடுபட்டு வந்த இல.கணேசனுக்கு ஆர்.எஸ்.எஸ் டூ ஆளுநராக பரிசு கிடைத்துள்ளதாகவே தமிழக பாஜக வட்டாரங்களில் மகிழ்ச்சியாக பேசப்பட்டு வருகிறது.

Kaanthalkalam

Next Post

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

Thu Nov 11 , 2021

Author

Saajaa Guna