கார்கோடகனை காத்த ஈசன்.! – ஆதலால் மக்களை காக்கும் கார்கோடகன்.! விஷக்கடி இல்லாத அதிசயம் மற்றும் பல அற்புதங்கள் நிறைந்த அரவூர் கிராமம்

நம் நிழல் நம் கால்களுக்குள் சுருங்கிக் கிடக்கும் உச்சிப் பொழுது. அந்த வெயிலையும் பொருட்படுத்தாமல், நம்மை அழைத்துப்போக நீடாமங்கலத் திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் வெயிலில் காத்திருந்தார் அந்த அடியார்.

கடும் வெயிலில் காத்திருக்கும் அவரைக் கண்டதும் வணங்கினோம். முகம் மலர வரவேற்றார்.

“இதோ ஒரே ரோடு… 3 கி.மீ தூரம்தான் அரவூர்” என்று சொல்லி நம்மை வழிநடத்தினார். அப்போதுதான் அறுவடை முடிந்து விளைநிலங்கள் எல்லாம் வெறுமனே கிடந்தன. முதியவர்கள் சிலர் மேயும் ஆடுகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

முறையான சாலை இல்லை என்றாலும் நிதானமாக இடறல் இன்றிப் பயணிக்க முடிந்தது. பத்து நிமிடத்தில் கோயிலை அடைந்தோம். தசைகளை இழந்து எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கும் உடல்போல பூச்சுமானங் கள் எல்லாம் உதிர்ந்து செங்கல்கள் தெரியும் சுற்றுச்சுவர். கோபுரம் இருந்த இடத்தில் தற்போது ஒரு மரம் மட்டுமே நிற்கிறது. பெருங் கதவுகள், காலத்தின் கோலத்தில் உழுத்துப் போய் உடைந்து விழும் நிலையில் உள்ளன.

தெற்கு வாசல் வழியாகக் கோயிலுக்குள் நுழைந் தோம். பேரமைதி! சில அடிகள் எடுத்து வைத்த நாம் அப்படியே நின்றுவிட்டோம். சுற்றிலும் செடி கொடிகள், விருட்சங்கள், இடிந்து கிடக்கும் சந்நிதிகள்… அவற்றுக்கு இடையே பாதி சிதைந்த சிற்பங்கள் என அந்த இடத்தின் காட்சியே ஓர் அமானுஷ்யமான உணர்வை ஏற்படுத்தியது.

ஊரின் பேரே அரவூர் என்பதாலோ என்னவோ, எந்நேரமும் சர்ப்பம் ஏதேனும் மேலிருந்து விழலாம் என்ற அச்சம் நமக்குள்.

“என்ன அப்படியே நின்னுட்டீங்க… வாங்க…” என்று அடியார் அழைக்க, உள்ளேயிருந்து வந்து வந்து நம்மை வரவேற்றார் சந்தானம் குருக்கள். நல்ல உயரம். உழைத்துக் கறுத்த முகம். உடலைப் பார்த்து அவர் வயதைக் கணிக்க முடியவில்லை.

“கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா உச்சிக்கால பூஜையை தரிசனம் செய்திருக்கலாம்” என்றார்.

“உச்சிக்கால பூஜையா… அப்போ பக்தர்கள் எல்லாம் இப்போதான் கிளம்பினாங் களா…” என்று கேட்டோம். அதற்கு அவர் சிரித்துவிட்டார்.

“பக்தர்களா… இந்த ஊரிலே பெரும் பாலும் பொருளாதாரத்துல சாதாரண ஜனங்கதான். விவசாய வேலை இல்லைன்னா கூலி வேலைக்குப் போவாங்க. எப்பவாவதுதான் கோயி லுக்கு வருவாங்க. உங்களை மாதிரி வெளி ஊரிலிருந்து யாராவது வந்தால் தான் உண்டு. மற்றபடி நானும் சுவாமியும் தான். யார் வந்தாலும் வரலேன்னாலும் சுவாமிக்கான பூஜைகளை நான் செய்து விடுவேன். பழைமையான கோயில் இது.

மகாபாரதக் காலத்தோடு தொடர்பு டைய தலம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இங்கே வந்து கைங்கர்யம் செய்து சுவாமியோட ஆசியை வாங்கிப்போனார்னா சும்மாவா… மன்னர்களும் அடியார்களும் கொண்டாடிய தலம்” என்று சொல்லியவாறு சுவாமியின் சந்நிதிக்கு அழைத்துச் சென்றார்.

அப்போதும் நமக்குள் அச்ச உணர்வு விலக வில்லை. தயக்கத்தோடு பின்தொடர்ந்தோம்.

கருவறையில்… சில மலர்கள்தான் சுவாமி யின் திருமேனியை அலங்கரித்தன என்றாலும் பொன்னும் மணியும் பூட்டியது போன்று பேரெழிலுடன் மிளிர்ந்தார் சுவாமி.

        கார்கோடகேஸ்வரர் 

         மங்களாம்பிகை 

“இவர் பேர் கார்கோடகேஸ்வரர். கார்க் கோடகன் எனும் பாம்பு பூஜித்தத் தலம். கார்க் கோடகனுக்கு அருளிய ஈசன், ‘இந்தத் தலத்தில் யாரும் அரவம் தீண்டி இறக்கக் கூடாது; இங்கு வந்து வழிபடுவோரின் சர்ப்ப தோஷங்கள்லாம் உடனே நீங்கணும்னு கட்டளையிட்டாராம்!” சந்தானம் குருக்கள் சொல்லிவிட்டு எங்களைப் பார்த்தார். அவரிடம் இப்படிக் கேட்கலாமா என்று தெரியவில்லை. ஆனால் கேட்டு விட்டோம்.

“ஐயா, அப்போ இங்க பாம்புகள் இருக்கா…”

மீண்டும் சிரித்தார் குருக்கள். “ஏன் பயமா இருக்கா… ஒருகாலத்துல நிறைய சர்ப்பங்கள் தென்படும். ஏன்… சில நாள் பூஜை பண்ண வர்றப்ப சுவாமி மேலையே சுத்திண்டிருக்கும். நாம் வந்து நின்னு கும்பிட்டா போதும். அதுபாட்டுக்கு நகர்ந்து போய்டும். நான் மட்டுமல்ல, இந்தக் கிராமத்து மனுஷா யாரும் சர்ப்பத்துக்குப் பயப்பட மாட்டா. இங்கே சர்ப்பம் மனுஷாளைத் தீண்டக்கூடாதுன்னு சுவாமியே சொல்லியிருக்காரே! அதேபோல், இதுவரைக்கும் இந்த ஊர்ல ஒருத்தர்கூட இங்கே பாம்பு கடிச்சி இறந்ததில்லை தெரியுமா…” என்றபடியே தீபாராதனை காட்டினார். கற்பூர வெளிச்சத்தில் லிங்கமூர்த்தி ஜோதி மயமாகத் தெரிந்தார். அப்படியே அம்பாள் சந்நிதிக்கு அழைத்துச் சென்றார் குருக்கள்.அம்பிக்கைக்கு மங்களாம்பிகை என்பது திருநாமம். எளிமையாய் எழிலோவியமாய் அருள்கிறாள்.

குருக்கள் பிரசாதம் தந்தார். அதை வாங்கி நெற்றியில் இட்டுக்கொண்டோம். அதுவரை மனத்தின் ஓரத்தில் இருந்த சிறு அச்ச உணர்வும் விலகல் தன்மை யும் நீங்கி, அந்த மண்ணின் மக்களில் ஒருவராகி விட்டதைப்போன்ற பாச உணர்வு மேலெழுந்தது.

குருக்களோடு ஆலயத்தைச் சுற்றிவந்தோம். ஆலயத்தின் சுவர்களிலெல்லாம் மரங்களும் செடி கொடிகளும் வளர்ந்து நின்றன. ஒருவேளை அந்தச் செடிகளைப் பிடுங்கிவிட்டால், ஒட்டுமொத்த ஆலயக் கட்டடமும் தகர்ந்துவிடுமோ என்று தோன்றியது.

அரவூர் கோயில்

ஆலயத்துக்கு ஒரு கிழக்கு வாசலும் அதன் எதிரே கார்க்கோடகன் ஏற்படுத்திய திருக்குளமும் உள்ளன. பயன்பாட்டில் இல்லாததால் அந்தப் பகுதி பார்ப்ப தற்கு ஏதோ காடுபோல இருந்தது. சந்தானம் குருக் களிடம் பேச ஆரம்பித்தோம்.

“எத்தனை வருஷமா இங்க சேவை செய்யுறீங்க..?”

சில நொடிகள் மௌனம் காத்தபின் பேசினார் சந்தானம்: “இது எங்க குடும்பம் பரம்பரை பரம்பரையா சேவகம் பண்ற கோயில். எங்க குடும்பத்திலே மொத்தம் ஐந்து பேர். ரெண்டு அக்கா, ஒரு அண்ணா, ஒரு தம்பி. பெரிய வசதி இல்லைங்கிறதால எல்லாருக்கும் படிப்பு குறைவுதான்.நான் ஆறாவ தோட சரி. அதன்பின் சுவாமி கைங்கர்யம் கத்துக் கிறதுன்னு வந்துட்டேன்.

அக்கா ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணின பின்னாடி, என் சகோதரர்கள் நீடாமங்கலத்துலையும் வேற ஊர்லையும் இருக்கும் கோயிலுக்குக் கைங்கர்ய பொறுப்பு எடுத்துண்டாங்க. பரம்பரைக் கோயிங்கிறதால எனக்கு இதை விட்டுட்டுப் போக மனசில்லை. சின்ன வயசிலேர்ந்து இந்த சுவாமியோடு இருந்துட்டதனால மனசெல்லாம் இந்த சுவாமிதான். இங்கே எனக்குச் சம்பளம் எதுவும் கிடையாது. இது தனியார் பொறுப்பில் உள்ள கோயில். எனக்கு இந்த ஊர்ல கொஞ்சம் நிலம் இருக்கு. விவசாயம் பண்றேன். அதுல கிடைக்கிற வருமானம்தான் எனக்கும் சுவாமிக்கும்.

கார்கோடகேஸ்வரர் கோயில்

இங்க ஹோமம் பண்ணினா சகல சம்பத்துகளும் வெற்றியும் கிடைக்கும்ங்கிறது புராண நம்பிக்கை. அப்படி, ஜோதிடர்கள் சொல்லி யாராவது வந்து பூஜைகள் செய்தால் ஏதேனும் வருமானம் வரும் அவ்வளவுதான்.

என் அண்ணா தம்பிகள் எல்லாம், ‘இது நம்ம பரம்பரைக் கோயில். சுவாமியைப் பூஜை இல்லாம விட்டுடாதே. வருமானம் இல்லைன்னு கவலைப்படாதே. நாங்க தர்றோம்னு சொல்லுவாங்க. ஆனா, நான் எதுவும் கேக்க மாட்டேன். அதேமாதிரி இந்த சுவாமியும் இதுநாள் வரைக்கும் என்னைப் பசியோடு உறங்கவிட்டதில்லை. அந்த அளவுக்குப் பெத்தவர் போல கரிசனமா எங்களைப் பாத்துக்கிறார்.

மங்களாம்பிகைதான் எங்க தாய். அவ சந்நிதில நின்னு குறை இருக்குன்னு யாரேனும் சொல்ல முடியுமா?

எனக்கு மூணு பொண்ணுங்க. மூணு பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. எல்லோரை யும் அம்பாள் நன்னா வாழ வச்சிருக்கா. இதைவிட என்ன பெரிய கொடுப்பினை வேண்டும். எல்லாத்துக்கும் மேல என் மனைவி ரேவதி. சின்னக் குறைகூட இதுவரை சொன்னதில்லை.

இன்னைக்கு உலகத்துல நாகரிகம் எவ்வளவோ வளந்துடுத்து. வசதி வாய்ப்புகள் பெருகிடுத்து. அதுல நூத்துல ஒண்ணுகூட இந்தக் கிராமத்துல இல்லை. ஆனா, கட்டிக் கிட்டு வந்த நாள்ல இருந்து இந்த நாள்வரைக்கும் ஒரு முனகல் இல்லாம என் கைங்கர்யத்துக்கு உதவுறா. இப்படி ஒரு மனைவி கிடைச்சதுகூட அந்த சுவாமியோட அருள்தானே.

எனக்கு ஒரே குறைதான். இத்தனை மகிமைகள் கொண்ட சுவாமி இப்படி இடிபாடுகளுக்குள்ள இருக்காரேன்னு மனசு கிடந்து அடிச்சுக்கும். நிர்வாகம் இதைச் சீக்கிரம் சீர் செஞ்சா, நான் தெம்பா இருக்கும்போதே சுவாமிக்கு ஒரு கும்பாபிஷேகம் பண்ணிப் பாத்துடலாம். அதை நிறைவேத்திவைக்கணும்னுதான் இந்த சுவாமியைத் தினமும் வேண்டிக்கிட்டு இருக்கேன்.

திருத்தொண்டர்

இங்கு வந்து வேண்டிண்டுட்டுப் போனவங்க வேண்டுதல் நிறைவேறி நன்றியோட போன் பண்ணுவாங்க. எல்லாம் அந்த ஈஸ்வரனோட அனுக்கிரகம்னு சொல்லுவேன். அப்படி வந்து போறவங்களோட வேண்டுதலையே நிறைவேற்றும் கார்க்கோடகேஸ்வரர் அனுதினமும் பூஜிக்கும் என் வேண்டுதலையும் நிறைவேற்ற மாட்டாரா என்ன” என்று அவர் உணர்வுப் பெருக்கோடு சொல்லும்போதே கண்கள் கலங்கியிருந்தன.

இந்த நம்பிக்கைகாகத்தான் அவர் தன் வாழ்க்கை முழுமையையும் அர்ப்பணித்து வாழ்கிறார். பொன்னும் பொருளும் அள்ளித் தரும் இடங்களில்கூட விசுவாசமாக வாழாத மக்கள் வசிக்கும் உலகம் இது. அப்படியிருக்க, சிவனின் சந்நிதியே நிம்மதி என்று வாழும் சந்தானம் குருக்கள் போன்றவர்களும் இருக்கதான் செய்கிறார்கள். பலர் இறைவனுக்குத் தொண்டர்களாக இருந்தாலும் சந்தானம் போன்றவர்கள் உண்மையிலேயே திருத்தொண்டர் என்று சொல்வதற்கான தகுதியைக் கொண்டவர்கள் என்பதில் ஐயமில்லை.

நிர்வாகம் ஏன் சீர் செய்ய மறுக்கிறது, அடியார்கள் இதைப் புனரமைக்க ஏன் அனுமதிக்கப்படுவதில்லை என்று ஆயிரம் கேள்விகள் இருந்தன கேட்பதற்கு. ஆனால் அவற்றுக்கான பதில்களை அவர் அறிவாரா என்பது தெரியாது.

ஆனால், காலம் நிச்சயம் பதில் சொல்லும். பழைமை யும் பெருமையும் வாய்ந்த ஈசனின் ஆலயம் மீண்டும் புத்தெழில் பெறும். கும்பாபிஷேகம் காணும் அந்தக் கோயிலில், சந்தான குருக்கள் மகிழ்வோடு திருத்தொண்டு புரியும் காலமும் வரும் என்று நம்பிக்கை மட்டும் நமக்குள் எழுந்தது.

தொண்டர்கள் வருவார்கள்…

சர்ப்ப தோஷங்கள் நீங்கும்!

மகாபாரதக் காலம். ஜனமேஜயன் சர்ப்ப யாகம் செய்தபோது, இந்த உலகில் இருக்கிற பாம்புகள் எல்லாம் யாகத் தீயில் விழுந்து அழியத் தொடங்கின.

கார்க்கோடன் எனும் சர்ப்பம் அதிலிருந்து தப்பிக்க இங்கே வந்து மறைந்து வாழ்ந்து சிவபூஜை செய்து வந்தது. தீர்த்தம் ஏற்படுத்தி தினமும் வழிபாடு செய்துவந்தது சர்ப்பம்.

கார்க்கோடகனின் பூஜையில் மகிழ்ந்து அவனைக் காத்தருளினார் ஈசன். கார்க்கோடகனும் `இந்தத் தலத்தில் இனி யாரும் பாம்பு கடித்து இறக்கமாட்டார்கள்; இங்கு வந்து வழிபாடு செய்தால் ராகு கேது தோஷங்கள் நீங்கும்’ என்று வாக்குக் கொடுத்தானாம்.

அதன்படி, இங்கு வந்து தோஷ நிவர்த்தி செய்துகொண்டவர்களின் சர்ப்ப தோஷங்கள் நீங்குகின்றன. செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை ஏற்படுகிறவர்கள், இங்கு வந்து வேண்டிக்கொண்டால் சீக்கிரம் கல்யாண வரம் கிடைக்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.

இந்த கோயிலுக்கு உள்ள சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் பூஜைக்கும் அபிஷேக ஆராதனைகளும் அந்த ஐயா விற்கும் ஏதேனும் உதவி செய்யணும் நினைக்கிறவங்க இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு
அவருக்கு உதவலாம்
சந்தானம் குருக்கள் செல் நம்பர் 919790473398

Kaanthalkalam

Next Post

சிக்கிய ரமேஷ் சிக்காமல் தலைமைப் பொறியாளரான ராஜேந்திரன்.!!

Mon Jun 20 , 2022
முத்தமிழறிஞர், மாண்புமிகு மேனாள் முதல்வர், தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின்மேல் அபாண்டமாக மேம்பால ஊழல் சுமத்திய திரு.இராஜேந்திரனுக்கா, இந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் அனைத்து அதிகாரங்களும் ஒருங்கே உள்ள வகையில் தலைமைப் பொறியாளர் பதவி அளித்து மணி மகுடமா?2001 முதல் 2006ஆம் ஆண்டு வரை செல்வி ஜெயலலிதா ஆட்சியின் போது, சென்னை மாநகராட்சியில் 1996-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கட்டிய பாலங்களில் முறைகேடு என ஒரு பொய்யான எந்த முகாந்திரமும் இல்லாத ஒரு குற்றச்சாட்டை […]

Author

Saajaa Guna